வணக்கம் உறவுகளே....
என்னதான் பெண்கள் உழைத்தாலும் அவர்களை மேலும் உழைக்க வைத்து பார்க்கிறது இந்த சமூகம். நான் இந்த ஊரில் கண்ட விஷயம் அதை மெய்பித்ததாக உள்ளது.
பெண்கள் கருவுற்று இருந்தால் அதிர்வான வாகனங்களில் செல்ல வேண்டாம் என்று தடுப்பு போடும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். ஆனால் இந்த ஊர் பெண்கள் 8 மாத கர்ப்ப நிலையிலும் இரு சக்கர வண்டி ஓட்டி செல்வதை பார்த்து வியந்துவிட்டேன்.
இவர்களின் உழைப்பு சாதாரணமானதல்ல, நம் ஊரில் பெண்கள் கருவுற்ற பிறகு வேலை செய்வதை குறைத்து விடுகிறார்கள் (எல்லோரும் அல்ல!). அதிலும் குறிப்பாக உடல் பயிற்சி சிறிதேனும் தேவை என்பதை மறந்து விடுகிறார்கள்.
இங்கு 9 மாதம் வரை வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். நம் நாட்டில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல கர்ப்பிணி பெண்கள் விரும்புவதில்லை மற்றும் எவரும் அனுமதிப்பதில்லை. ஒரு புறம் குடும்ப பாரம், மறுபுறம் வயிற்றில் குழந்தை சுமந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
இங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது வெகு குறைவு. என் கணவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் சகோதரி நேற்று எங்கள் வீட்டிற்கு வந்து இருந்தாள். அவள் ஒரு 7 மாத கர்பிணி மற்றும் அவள் இரு சக்கர வாகனத்தில் வந்து இருந்தது என்னை அதிர்சிக்குள்ளாக்கியது. அவளிடம் பேசும்போது பல விஷயங்களை புரிந்து கொண்டேன். அவளின் கணவருக்கு சொற்ப வருமானமாம். இருவர் இணைந்து உழைத்து கொண்டுவரும் பணமே போதவில்லை என்று கூறினாள்.
இங்கு 3 இலிருந்து 4 மாத விடுப்பே கொடுக்கப்படுமாம். எப்படி இருந்தாலும் அதிலும் பெண்கள் சுறுசுறுப்பு கலந்த ஈடுபாட்டுடன் வேலை புரிவதை கண்டு வியக்கிறேன். வேலை நேரத்தை முடிந்த வரை நேர்மையாக கழிக்கிறார்கள். ஆண்கள் பற்றி கவலை இல்லாமல் தங்களுக்கு தேவையான விஷயங்களை தங்களின் உழைப்பால் பெற்று கொள்கிறார்கள்.
என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!



